சென்னை தலைமைச் செயலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சர் விஜயை இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வைகோவை நேரில் சந்தித்த நிலையில், இன்று வைகோ முதல்வரை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சந்திப்பின் போது, ஸ்டெர்லைட் ஆலையில் புதிய உற்பத்திப் பிரிவு தொடங்க உள்ளதாக வெளியான தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என முதலமைச்சர் விஜயிடம் வைகோ வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அவர் முதல்வருடன் விரிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வரும் 24ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில், திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே நடந்த செயற்குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பலரும் வைகோவிடம் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், வைகோ அனைவரையும் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், வரவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்துகளை ஏற்று, வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வைகோ அத்தகைய 'விஷப்பரீட்சை'யை செய்ய விரும்ப மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை வைகோ கூட்டணியில் இருந்து வெளியேறினால், மதிமுகவில் இருந்து பலர் வெளியேறுவார்கள் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வைகோ தனது எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.