முதலமைச்சர் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்புவதாகவும், ஆனால் கடந்த 116 நாட்களில் 550 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசை விமர்சிப்பவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்வதாகவும், ஆனால் முதலமைச்சரை நேரடியாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லது புகார் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். 'எங்களுக்கு வந்தால் ரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?' என்ற பாணியில் பாஜக செயல்படுவதாகவும், அவர்கள் அடித்தாலும், வலித்தாலும் அதை வெளியே சொல்லக் கூடாது என்ற அரசியல் உத்தியை இதுவரை யாரும் பார்த்ததில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை மற்றும் உளவுத்துறை செயலிழந்துவிட்டதா என்றும் உதயநிதி ஸ்டாலின் வினவினார். குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை, அரசை விமர்சிக்கும் இளைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 116 நாட்களில் மட்டும் 550 குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 10 சாதிய ஆணவப் படுகொலைகள் மற்றும் 8 காவல் மரணங்கள் அடங்கும் என்றும் அவர் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள்தான் ஆகிறது என்பது தேர்தல் வாக்குறுதிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும் என்றும், ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு அது பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் தங்களுக்கு கேள்வி கேட்டு சரியான பதிலைப் பெற வேண்டிய பொறுப்பை முதலமைச்சருக்கு கொடுத்துள்ளனர் என்றும், 'ரீல்ஸ் கன்டென்ட், ரோல் கேமரா, ஆக்ஷன், குட்டிக் கதை' சொல்லாமல் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுகதான் இன்னும் ஆட்சி செய்கிறது என்ற நினைப்பை முதலமைச்சர் கைவிட்டு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
