தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது, கட்சியில் பொறுப்பு கேட்கச் சென்ற பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை கூறி, பின்னர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது புகார் மனுவில், கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு தவெக கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகளிர் அணி பொறுப்பு கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர், 'பெண்களுக்கான கட்சி இது, உங்களுக்கு முன்னுரிமை உண்டு' என்று உறுதியளித்ததாகக் கூறியுள்ளார்.
பின்னர், விழாக்கள் நடக்கும்போது தன்னை அழைக்குமாறு அவர் கேட்டபோது, விஜய்மோகன் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னைத் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கியதாகப் பெண் தெரிவித்துள்ளார். கட்சியில் பதவி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்றும், தனக்காக அவர் என்ன செய்வார் என்றும் விஜய்மோகன் கேட்டதாகவும், அதற்குப் பெண் தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறியபோது, 'எனக்கு வீடியோ கால் செய், அது போதும்' என்று ஆசை வார்த்தை கூறியதாகப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விஜய்மோகன் வீடியோ கால் செய்து, பெண்ணின் தோற்றத்தைப் பாராட்டி, திருமணம் ஆகிவிட்டதா என்று விசாரித்ததாகவும், பின்னர் மார்பகத்தைக் காட்டுமாறு கேட்டதாகவும், பெண் மறுத்ததும் கால் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மீண்டும் தொடர்பு கொண்ட விஜய்மோகன், பதவி வேண்டுமானால் இது போன்ற சின்ன விஷயங்களைச் செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்குப் பெண் சம்மதித்ததும், அந்த வீடியோவை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங் பதிவைக் காட்டி, முழு உடலையும் காட்டுமாறு மிரட்டியதாகவும், பயப்பட வேண்டாம் என்றும், எந்த உதவியும் வேண்டுமானால் கேட்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, விஜய்மோகன் மீது BNS சட்டப்பிரிவுகள் 75, 78, 308, 351 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியிலும், இராணிப்பேட்டை பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

