மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 சட்டமன்ற உறுப்பினர்களும், 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இணைய தயாராக இருப்பதாக பாஜக மக்களவை உறுப்பினர் சவுமித்ரா கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மேற்கு வங்காளத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக 208 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திரிணமூல் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் 1, ஏஜேயுபி 2, ஏஐஎஸ்எப் 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் நூறு கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜக பெரும்பான்மையுடன் செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக குரல் எழுப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைய தயாராக இருப்பதாக பாஜக எம்.பி சவுமித்ரா கான் கூறியுள்ளார். 'எங்கள் கட்சியின் மத்திய தலைமை அனுமதி அளித்தால், திரிணமூல் காங்கிரஸ் என்ற கட்சி மேற்கு வங்காளத்தில் இருக்காது. அதிருப்தியில் உள்ள 50 சட்டமன்ற உறுப்பினர்களும், 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி குறித்து பேசிய சவுமித்ரா கான், 'அபிஷேக் பானர்ஜி பாவம் செய்துள்ளார். அவர் சிறைக்கு செல்ல வேண்டும். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக உறுப்பினர்களின் வீடுகளை அவர் இடித்தார். அதன் விளைவாக இப்போது அவர் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளார். அவர் நரகத்துக்கு செல்ல வேண்டும்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.