திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்த சோகம் தொடர்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக 2 தனியார் மற்றும் 2 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
முதற்கட்டமாக, 9 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேரின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த சுபாசி ஜூவாங்ஸ் (வயது 24) என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த ரீட்டா ஜூவாங்கா (வயது 28) என்பவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக, இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அமோனியா வாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.