தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான கூட்டணியை தக்கவைக்கும் சக்தி தனக்கு இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களுடன் விவாதித்ததாகவும், உயர்நிலைக் குழு கூட்டத்தில் பெரும்பான்மையானோர் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.
நான் கட்சியின் தலைவர் என்ற முறையில், பொதுச்செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவை எடுப்பேன் என்றும், அந்த முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் கூறியதாக திருமாவளவன் தெரிவித்தார். விசிக எடுத்த இந்த முடிவுக்கு பதவி ஆசை காரணம் இல்லை என்றும், தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியை மு.க.ஸ்டாலின் அறிவார் என்றும் அவர் குறிப்பிட்டார். தான் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து எழுந்தபோது அதை ஏற்க மறுத்ததாகவும், ஆனால் பின்னர் வன்னியரசுவை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்ததாகவும் அவர் விளக்கினார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும், தேர்தலுக்கு முன்பாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நீடிக்கவும், வலுப்பெறவும் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டதாகவும் திருமாவளவன் கூறினார். தன்னை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல முயற்சிகள் நடந்தபோதும், அதற்கு இடம் கொடுக்காமல் உறுதியாக நின்றதாக அவர் தெரிவித்தார். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த ஒருபோதும் இடம் தரமாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தன்னை குறிவைத்து சாதிய, மதவாத கட்சிகள் காய்களை நகர்த்தியதாகவும், கோபமூட்டவும், ஆத்திரமூட்டவும் முயன்றதாகவும் அவர் கூறினார். தன்னால் முடிந்தவரை உறுதுணையாக இருந்ததாகவும், ஆனால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியைக் காக்கும் வலிமை தனக்கு இல்லை என்றும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் எடுத்த முடிவுகளைத் தடுக்கும் வலிமை தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் எடுத்த முடிவில் தலையிட முடியாது என்றும், சமூக ஊடகங்களில் தன் மீது வீசப்படும் அவதூறுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். இடதுசாரிகளின் முடிவை முன்வைத்து தங்கள் கட்சியில் ஆலோசித்த பின்னரே முடிவெடுத்ததாகவும், தங்கள் கட்சிக்கு ஒரு விதிமுறை, வரையறை இருப்பதாகவும் அவர் கூறினார். திமுக கூட்டணியில் இருந்தபோதும், ஆதரவு நல்குவது அல்லது அளிக்காமல் இருப்பது தங்கள் உரிமை, சுதந்திரம் என்றும், இதில் யாரும் தலையிட முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு கட்சியை உருவாக்கி 10 ஆண்டுகள் கட்டுக்கோப்பாக நடத்துவது எளிதல்ல என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவருடைய வாழ்த்துகளுடனோ, ஆதரவுடனோ, இசைவுடனோதான் ஆட்சி அமைப்பதற்காக இந்த ஆதரவை வழங்குகிறோம் என அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தடுக்கவே ஆதரவை வழங்கினோம் என்றும், அவ்வாறு செய்யக்கூடாது என மு.க.ஸ்டாலின் ஒருபோதும் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார். தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து, தனது பக்குவத்தின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தை அணுகியதாகவும், ஒற்றுமையாகச் செயல்படுவோம், தவெக ஆட்சி அமைக்க நாம் இடையூறாக இருக்க வேண்டியதில்லை என அவர் தெரிவித்ததாகவும், இது அவரின் அரசியல் பக்குவத்தையும், முதிர்ச்சியையும் காட்டுவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.