தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெயரை தவறாகப் பயன்படுத்தி அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியதாக எழுந்த சர்ச்சை தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் தேனி வடக்கு மாவட்ட மகளிரணி தலைமை என தன்னை கூறிக்கொண்டு, அஜிதா தெய்வேந்திரன் என்பவர் அரசு அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அஜிதா தெய்வேந்திரன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு நடத்தியது, மகளிர் குழு சந்திப்பு, விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தது போன்றவற்றை சமூக வலைதளங்களில் ரீல்ஸாகப் பதிவிட்டு, தவெக தலைமையையும் டேக் செய்துள்ளார். மேலும், தேனி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏக்களின் ஆய்வின் போது அவருடன் சென்றதையும் ரீல்ஸாகப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தவெக மகளிரணி தலைமை என்று யாரையும் நியமிக்கவில்லை என்றும், கட்சிப் பெயரைப் பயன்படுத்தி அரசு அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழக தேனி வடக்கு மாவட்டத்திலிருந்து மாவட்ட மகளிர் அணி என்று யாருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. மாவட்ட மகளிரணியினர் என்றும் மற்றும் நிர்வாகிகள் என்றும் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி எந்த அரசு அலுவலகங்களையோ அல்லது தனியார் நிறுவனங்களையோ அணுகக் கூடாது’ என எச்சரித்துள்ளார்.
மேலும், கட்சியின் பெயர் மற்றும் பொறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது கடுமையான ஒழுங்கு மீறலாகக் கருதப்படும் என்றும், விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கட்சியின் சார்பில் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் கட்சிக்குள் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.