தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருவதால், சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரவிலும் தொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்ற நிச்சயமற்ற நிலை, மறுநாள் பணிக்கு செல்பவர்களிடையே மன உளைச்சலை அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர, தமிழகத்தின் பல பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் தொடர்கின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே சென்னை பெரம்பூர், ராயபுரம், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளிலும், கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற பல இடங்களிலும் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொளத்தூர் பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டதால், மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்ற போராட்டங்கள் பல இடங்களில் தொடர்கின்றன.
தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்த சம்பவமும் அரங்கேறியது. கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு பிரச்சனைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.