தமிழகத்தில் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு, சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. இந்த முக்கியப் பணி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது.
முதற்கட்டமாக, வீடுகள் மற்றும் வீட்டுவசதி குறித்த கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விரிவான முறையில் 2027 பிப்ரவரி மாதம் நடத்தப்படும்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்களது விவரங்களை தாங்களாகவே பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பதிவுப் பணி, 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை https://se.census.gov.in/ என்ற இணையதள முகவரி வழியாக நடைபெறும். பொதுமக்கள் தங்களது கைபேசி எண்களைப் பயன்படுத்தி இந்த இணையதளத்தில் தங்களது குடும்ப விவரங்களைப் பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரே ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே பதிவு செய்ய முடியும். மொத்தம் 34 கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, 12 இலக்க அடையாள எண் ஒன்று பயனரின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பின்னர், கணக்கெடுப்புப் பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வரும்போது, இந்த 12 இலக்க அடையாள எண்ணை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
குடும்பத் தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள வேறு யாரேனும் ஒருவர் வீடு மற்றும் அது தொடர்பான வசதிகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்யலாம். குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் சார்பாக மட்டுமே இந்தப் பதிவை மேற்கொள்ள முடியும். ஒருமுறை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வேறு எந்தக் குடும்பத்தினரும் பயன்படுத்த முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் பெயரைப் பதிவு செய்த பிறகு மாற்ற இயலாது. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே இந்த இணையதளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்படும். விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை இந்த கால அவகாசத்திற்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்வதற்கு, https://se.census.gov.in/ இணையதளத்திற்குச் சென்று, முதலில் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைத் தேர்வு செய்து, பின்னர் கேப்சாவைப் பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்ததாக, குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, விருப்ப மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலம் உங்கள் மொபைல் எண் உறுதி செய்யப்படும்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டம் மற்றும் முக்கிய இடங்களைத் தேர்வு செய்து, வரைபடத்தில் உங்கள் வீடு இருக்கும் பகுதியைக் கண்டறிந்து சேமிக்க வேண்டும். அதன் பிறகு, கேள்வித்தாள் பக்கம் தோன்றும். பெரும்பாலான கேள்விகள் விருப்பத்தேர்வு முறையில் அமைந்துள்ளன. பதில்களைப் பதிவு செய்ய விர்ச்சுவல் கீபோர்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகங்களைத் தீர்க்க FAQ மற்றும் தீர்வுகள் இணையதளப் பக்கத்தில் உள்ளன. ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தால், இணையதளமே நினைவுபடுத்தும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. பதிவு முடிந்ததும், 11 இலக்க ஐடி தோன்றும், அது மொபைல் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
