சென்னை: மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் யூடியூபர் குறித்து 8 மாதங்களுக்கு முன்பு பேசிய புகாரில், முன் விசாரணை இன்றி நேரடியாக கைது செய்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள மன்றம், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா என்றும் சந்தேகம் எழுப்பி, அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது. நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக தாமோதரன் பிரகாஷ் பணியாற்றி வருகிறார்.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மாலதி என்பவர், ‘சவுக்கு மீடியா’ யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக உள்ளார். இவர், வார இதழ் நிருபரான தாமோதரன் பிரகாஷ் மற்றும் பெயர் தெரியாத ஒரு நெறியாளருடன் இணைந்து, ‘HIV சவுக்கு மாலதியும் கல்யாணம்’ என்ற தலைப்பில், மாலதியை அவதூறாகவும், அவருக்கு HIV இருப்பதாக சித்தரித்தும், அவரது புகைப்படத்தை காட்டி, தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்தியும் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த ஜனவரி-2026 மாதம் “கிங் 24 X 7” என்ற யூடியூப் சேனலில் வெளியாகி, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக மாலதி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (BNS Act), தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், வழக்கில் தொடர்புடைய தாமோதரன் பிரகாஷ், வயது 58, த/பெ. தாமோதரன், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை என்பவரை இன்று (16.09.2026) கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாமோதரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், 'புகாருக்கும் நடவடிக்கைக்கும் இடையே 8 மாதங்கள் இடைவெளி ஏன்? இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணத் தோன்றுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 'பத்திரிகைத்துறையில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக பயணித்து வரும் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நக்கீரன் இதழ் வெளியிட்ட பல முக்கிய புலனாய்வு செய்திகளில் இவரது பங்கு மகத்தானது. சங்கரராமன் கொலை வழக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் யாருக்கும் அஞ்சாமல் இவர் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன' என்றும் மன்றம் தெரிவித்துள்ளது.
இன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தாமோதரன் பிரகாஷ் இல்லத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். கைது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு யூடியூப் சேனலில் பெண் யூட்யூபர் குறித்து தாமோதரன் பிரகாஷ் தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகார வர்க்கத்தின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் தாமோதரன் பிரகாஷ், சுமார் 8 மாதங்களுக்கு முன் யூடியூபில் பேசியதற்காக எந்தவித முன் விசாரணையும் இன்றி தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. தாமோதரன் பிரகாஷ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தொடர்புடைய நபரிடம் சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்காமல், எந்தவித விசாரணையும் நடத்தாமல் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
