குற்றவாளிகள் இனி தப்பிக்க முடியாது! டெல்லி போலீசார் குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், குற்றப் பின்னணி கொண்ட நபர்களை எளிதாக அடையாளம் காண முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில், சுமார் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் குற்றப் பின்னணி கொண்ட நபர்களைக் கண்டறிய டெல்லி போலீசார் இந்த ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தினர். இந்த கண்ணாடிகள், போராட்டக்காரர்கள் மத்தியில் இருந்த குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறைக்கு பெரிதும் உதவின. பலர் இந்த கண்ணாடிகளை 'மெட்டா ரே பான்' என்று தவறாக நினைத்தாலும், இவை இந்தியாவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'Ajnalens' என்ற மும்பை நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும்.
இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் முக்கிய சிறப்பம்சமே, ஒருவரின் முக அடையாளத்தை உடனடியாக ஸ்கேன் செய்து, அவர் யார் என்பதை சில மில்லி விநாடிகளில் கண்டறியும் திறன் ஆகும். கண்ணாடியை அணிந்திருக்கும் அதிகாரி ஒருவரைப் பார்க்கும்போது, அந்த நபரின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு, சில நொடிகளில் காவல்துறையின் 65,000 குற்றப் பதிவுகளின் தரவுத்தளத்துடன் ஒப்பிடப்படுகிறது. இதன் மூலம், பதியப்பட்ட குற்றவாளிகள் அல்லது தேடப்படும் நபர்களின் பட்டியலில் உள்ள ஒருவருடன் முகம் பொருந்தினால், உடனடியாக அதிகாரிக்கு எச்சரிக்கை செல்லும்.
இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான், போராட்ட கும்பலில் இருந்த 2000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை டெல்லி போலீசார் கண்டறிந்தனர். பொது இடங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் மக்களின் முகங்களை ஸ்கேன் செய்து, காவல்துறையின் குற்றப் பதிவேட்டுடன் உடனடியாக ஒப்பிட்டுப் பார்க்க இந்த கண்ணாடிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. மேலும், இந்த கண்ணாடிகளுக்கு இணைய இணைப்பு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள், குருகிராமில் உள்ள ஒரு AI ஆராய்ச்சி நிறுவனத்தின் 'ஜார்விஸ்' (Jarvis) என்ற மென்பொருளின் கண்காணிப்பில் இயங்குகின்றன. டெல்லியில் உள்ள பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களுடன் இந்த மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முகங்கள், வாகனங்கள் மற்றும் கூட்டங்களை ஸ்கேன் செய்யும் வகையில் கண்ணாடியில் பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக, 'ஜார்விஸ்' (Jarvis) மென்பொருள், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் போலீசாருடன் இணைந்து குற்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும் உருவாக்கப்பட்டது. தற்போது, டெல்லி போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் இந்த கண்ணாடிகளையும், அதன் மென்பொருளையும் ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பம், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதிலும், குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்வதிலும் ஒரு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
