மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு, நேர்மையான மற்றும் சமமான தொகுதி மறுவரையறையையும் வரவேற்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. போதிய ஆதரவு இல்லாததால், கடந்த கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
தற்போதைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆளும் பாஜக தரப்பிலிருந்து பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பஞ்சாபின் பிரதான எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பிற்குப் பிறகு, சுக்பீர் சிங் பாதல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர்கள் கூட்டம் சண்டிகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சீக்கிய குருக்களின் வழிகாட்டுதல்களின்படி பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை சிரோமணி அகாலி தளம் முழுமனதுடன் ஆதரிக்கிறது. இதேபோல் நேர்மையான, சமமான தொகுதி மறுவரையறையையும் ஆதரிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்' என்றும் சுக்பீர் சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்து, 1997 இல் பஞ்சாபில் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளிலும் இதே கூட்டணி ஆட்சி நீடித்தது. கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டணி உடைந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்தன.
இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாகவே சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
