இளைஞர்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய மோடி அரசு, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி ஒரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
"இளைஞர்களின் போராட்டங்களுக்கு முன் மண்டியிட்ட ஒன்றிய மோடி அரசு, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு என்பதாக ஒரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் 'வல்லுநர்கள்' கொண்ட ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், இந்திய உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஒன்றிய கல்வித் துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அம்ரித் லால் மீனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வில் நாடு தழுவிய அளவில் பெருமளவில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, முன்னாள் ஐஐடி கான்பூர் நிர்வாகக்குழு தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை மோடி அரசு அமைத்தது. நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (NTA) சீரமைக்கும் என்று கூறப்பட்ட இக்குழு, அதே ஆண்டு அக்டோபர் 22 அன்று 101 பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால், இன்றுவரை அந்தப் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றாத மோடி அரசு, இப்போது மீண்டும் ஒரு கண்துடைப்பு குழுவை அமைத்துள்ளது. 2024 நீட் முறைகேட்டில் இருந்து 2026 முறைகேடு வரை தேசிய தேர்வு முகமைக்கு முழுநேர தலைமை இயக்குநர் நியமனம் கூட ஒன்றிய அரசால் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு, தேர்வு முகமையை சீரமைத்த லட்சணம் இதுதான். இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு, தேசிய அளவிலான தேர்வு முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராயும் என்று அறிவிக்கப்பட்டாலும், அது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நொறுங்கிப் போன மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்றுவதற்கான குழுவாகவே அமைந்துள்ளது. மாட்டு மூத்திரம் குடித்தால் நோய்கள் குணமாகும் என்று அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் முரணாக பாடம் எடுக்கும் ஐஐடி இயக்குநர் காமகோடி இக்குழுவில் இருப்பது வேடிக்கையானது. ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று இல்லை என்று ஒன்றிய மோடி அரசே அறிவித்த ஒன்றுக்கும் உதவாத ஆதார் அட்டையை கொண்டு வந்தவர்தான் குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி. மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் மக்கள் நல திட்டங்களிலிருந்து ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மற்றும் சிறுபான்மையின மக்களை ஒதுக்கி வைக்கும் கருவியாக ஆதார் அட்டையை பாஜக ஆளும் மாநில அரசுகள் பயன்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் காலங்காலமாக நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் 100% மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்று, எந்த சிக்கலும் தடங்கலும் இன்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், ஒன்றிய மோடி அரசோ சரக்கு போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்று கூறி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைமை அதிகாரிக்கு கல்வித்துறை சீரமைப்பில் என்ன வேலை? அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சனநாயக பண்பு 'எல்லோருக்கும் எல்லாம்' என்பதே. சமமான கல்வி வசதியும் வாய்ப்பும் இல்லாத சூழலில், தகுதியை நிர்ணயித்து மாணவர்களை வெளியே நிறுத்தும் பிரத்தியேக தேர்வு முறைகள் மக்கள் விரோத சனாதன பண்புகளைக் கொண்டவை. நீட் தேர்வு ரத்து என்பதே நமது தங்கை அனிதா தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் நீட் உயிர்க்கொல்லி தேர்வுக்கு நாம் இழந்து வரும் குழந்தைகளுக்கான நீதியாக அமையும். இந்தாண்டு முறைகேட்டினால் ரத்தான நீட் தேர்வால் மட்டும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்தப் பதிவை எழுதும்போதே, நீட் மறுதேர்வு எழுதிய மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அங்கீதா சுரேஷ் சங்காலே எனும் 19 வயது மாணவி உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி நெஞ்சை பிளக்கிறது. நீட் போன்ற உயிர்க்கொல்லி தேர்வு ரத்தே நமது ஒரே இலக்கு! நமது மாணவர் – இளைஞர் படை அதனை நிச்சயம் நிறைவேற்றும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒன்றிய அரசு நியமித்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் தகுதிகள் குறித்தும் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார். சரக்கு போக்குவரத்து நிபுணரை கல்வித்துறை சீரமைப்பில் நியமிப்பதும், உளவுத்துறை அதிகாரியை கல்வித்துறையில் ஈடுபடுத்துவதும் எந்த வகையில் நியாயம் என்றும் அவர் வினவியுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எந்தவித பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒன்றிய அரசின் தேர்வு முறைகள் மக்கள் விரோத சனாதன பண்புகளைக் கொண்டவை என விமர்சித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தனது ஒரே இலக்கு என்றும், அதற்காக மாணவர்-இளைஞர் படை பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
