உத்தரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காணிக்கைகள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மதுரா கோயில் நில மீட்பு வழக்கின் முக்கிய மனுதாரரான துறவி தினேஷ் பலஹாரி மஹாராஜ், முதல்வர் யோகிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கம், வெள்ளி, ரொக்கப் பணத்தில் முறைகேடு நடப்பதாகவும், கோயில் நிர்வாக அமைப்பின் செயலாளர் கபில் சர்மா சட்டவிரோதமாக ரூ.1,000 கோடி சொத்து சேர்த்துள்ளதாகவும்' குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், இப்புகாரை மறுத்துள்ள கபில் சர்மா, 'எங்கள் நிர்வாகம் மிகவும் நேர்மையானது. எந்தவொரு விசாரணைக்கும் எங்கள் அறக்கட்டளை தயாராக உள்ளது' என்று பதிலளித்துள்ளார். இதற்கிடையே, தங்கள் நேர்மையை நிரூபிக்கும் வகையில், 'கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான்' நிர்வாக அமைப்பும் இந்த நிதி முறைகேடு புகார் குறித்து அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் யோகிக்குத் தனியாக ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவர் மணிஷ் சாஹ்னி தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சாஹ்னி, 'அயோத்தி ராமர் கோயில் நில விவகாரம், ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில் வெள்ளியின் தரம் குறித்த சர்ச்சை, திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விவகாரம், இப்போது மதுரா கோயில் திருட்டு என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளன. தனியார் அமைப்புகளிடம் கொடுத்து முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க, அனைத்து முக்கியக் கோயில்களையும் அரசே ஏற்று நடத்தவேண்டும். சங்கராச்சாரியார்கள் தலைமையில் இந்து பாதுகாப்பு வாரியம் அமைக்கவேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.