2027 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு ஆண்டு கால ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜாகீர் கான் சிஎஸ்கே நிர்வாகத்தின் முதல் தேர்வு இல்லை என்ற தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முன்னதாக, ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், 2019 உலகக்கோப்பை வென்ற அணியின் தலைவருமான இயன் மோர்கனை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க சிஎஸ்கே நிர்வாகம் முதலில் அணுகியது. அவரது முதிர்ச்சியான கிரிக்கெட் அனுபவம் மற்றும் தலைமைத்துவப் பண்புகள் காரணமாக அவரை அணிக்கு அழைத்து வர நிர்வாகம் விரும்பியது.
ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் வழங்கிய இந்த வாய்ப்பை இயன் மோர்கன் ஏற்க மறுத்துவிட்டார். மற்றொரு ஐபிஎல் அணியும் அவரை அணுகிய போதிலும், இரண்டு அணிகளின் அழைப்புகளையும் அவர் நிராகரித்துள்ளார். தனக்கு தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் பணியே மனநிறைவைத் தருவதாகவும், அதைத் தொடர விரும்புவதாகவும் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் மைக் ஹஸ்ஸியின் பெயரும் தலைமைப் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது. எனினும், அவரைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளராகவே நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்தது.
இயன் மோர்கன் மறுத்த பின்னரே, களத்தில் இறங்கிய தோனி, ஜாகீர் கானின் பெயரை நேரடியாகப் பரிந்துரைத்தார். இதுகுறித்து சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், 'இது நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முடிவு. தோனி இந்த யோசனையை முன்வைத்தார். அவர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உரிமையாளர் ரூபா குருநாத் ஆகியோருடன் விரிவாகப் பேசி இந்த முடிவை எடுத்தார்' என்று தெரிவித்தார்.
இதன் மூலமே, ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு ஜாகீர் கானின் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், குறைந்தபட்சம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில், ஜாகீர் கானின் தலைமைப் பயிற்சியாளர் பதவி நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டதன் பின்னணியில் தோனியின் பரிந்துரை முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்த மாற்றம் அணியின் எதிர்கால செயல்பாடுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
