மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், திருமணத்திற்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறி 42 குடும்பத்தினரை ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். முகேஷ் பைரங்கி மற்றும் சுனிதா தம்பதி, திருமண வரன் மையம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், பெரும்பாலும் வரன் பார்த்து தராமல், மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
சமீபத்தில், ஒரு பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போவதாக கூறி, 42 மணமகன் வீட்டார்களிடம் இருந்து தலா ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அதிக வயது காரணமாக திருமணம் ஆகாமல் விரக்தியில் இருந்த குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களுக்கு மணப்பெண் ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.
மணப்பெண்கள் அனைவரும் இந்தூரில் உள்ள ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தவர்கள் என்று கூறி, இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டியுள்ளனர். மே 24 ஆம் தேதி தேவாஸில் உள்ள ராதாகஞ்ச் கிளப் வளாகத்தில் திருமணம் நடைபெறும் என்றும், மணப்பெண் குடும்பத்தார் அனைவரும் அங்கு வந்து சேருமாறும் முகேஷ், சுனிதா கூறியுள்ளனர். ஆனால், அன்று காலை ராதாகஞ்ச் கிளப் வந்தபோது, திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதையும், மணப்பெண்கள் யாரும் இல்லை என்பதையும் கண்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து கேட்டபோது, மணப்பெண்கள் இந்தூரில் இருந்து கிளம்பிவிட்டதாகவும், விரைவில் வந்து சேர்ந்து விடுவர் என்றும் முகேஷ், சுனிதா சமாளித்துள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை காத்திருந்தும் யாரும் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகன் வீட்டார், முகேஷ், சுனிதா தம்பதி மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.