தமிழகத்தில் நீண்டகாலமாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளை ஒன்றிணைத்து, ஒரே பக்கத்தில் அமரவைத்த பெருமை முதலமைச்சர் விஜய்க்கு சேரும் என வீட்டு வசதித் துறை அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்குமார், 'எத்தனை ஆண்டுகளுக்குத்தான் திமுக, அதிமுக என போட்டி போட்டுக்கொள்வீர்கள்? வாருங்கள், இனி ஒற்றுமையாக ஒரே பக்கத்தில் அமரலாம்' என்று கூறி, இரு கட்சிகளையும் அருகருகே அமரவைத்ததன் மூலம் ஒரு புதிய வரலாற்றை முதல்வர் விஜய் படைத்துள்ளார். தற்போது இரு கட்சி உறுப்பினர்களும் முன்பை விட ஒற்றுமையாகவும், சிரித்துப் பேசியும் பழகி வருகின்றனர். இந்த ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வேண்டும். இதுவே முதல்வர் விஜய்யின் முதல் சாதனை' என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் தனித்தனி பக்கங்களில் அமர்ந்து, ஒருவர் ஆளுங்கட்சி என்றால் மற்றவர் எதிர்க்கட்சி என்ற பாணியில் செயல்பட்டு வந்தனர். ஆனால், 2026ஆம் ஆண்டு தமிழக மக்கள், முதல்வர் விஜய்யின் தலைமையிலான அரசுக்கு ஒரு புதிய தீர்ப்பை எழுதியுள்ளதாக அமைச்சர் ராஜ்குமார் கூறினார்.
'கடந்த காலத்தில் இருந்த குறைகளை மட்டும் பட்டியலிடுவதற்காக மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தவில்லை. மாறாக, அந்தக் குறைகளைச் சரிசெய்து, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை செதுக்குவதற்கான பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு புதியவர்கள் தான், ஆனால் மக்களின் பிரச்சினைகள் எங்களுக்குப் புதியவை அல்ல. மக்களுடன் வாழ்ந்தவர்கள், அவர்களின் தேவைகளை அறிந்தவர்கள். நாங்கள் புதியவர்கள் என்றாலும், விரைவாக கற்றுக்கொள்ளக்கூடியவர்கள்' என்று அமைச்சர் தெரிவித்தார்.
'59 ஆண்டுகளுக்குப் பிறகும், தரமான பள்ளி, மருத்துவம், குடிநீர், சாலை, பாசனம் போன்ற அடிப்படை வசதிகளைப் பற்றித்தான் இன்றும் நாம் சட்டப்பேரவையில் விவாதிக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்தார்கள்? என்ற கேள்வி மக்கள் மனதில் இயல்பாக எழுகிறது. கடந்த 59 ஆண்டுகள் என்பது சாதாரண காலம் அல்ல, அது இரண்டு தலைமுறைகளின் காலம். இரு பெரும் கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாடு வளரவே இல்லை என்று நாங்கள் கூறவில்லை. தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது, பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை மறுப்பது அரசியல் நாகரிகம் ஆகாது' என்றும் அமைச்சர் ராஜ்குமார் தனது உரையில் குறிப்பிட்டார்.
