பல தடைகளைத் தாண்டி 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகி இருந்தால், அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்டார். படத்தின் படப்பிடிப்பு கடைசி நாள் உணர்வுப்பூர்வமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
'ஜனநாயகன்' படத்தின் முதல் காட்சியை நாளை பார்க்க முடியாத நிலை உள்ளதாகவும், வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் முதல் காட்சியைத் தவறவிடுவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். இந்தப் படத்திற்கு மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், 'ஜனநாயகன்' படத்தில் தானுமொரு காட்சியில் நடித்திருப்பதை ஒரு கூடுதல் செய்தியாக அவர் பகிர்ந்து கொண்டார். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில், சிறுநீரகத் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடைபெறும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்தார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வை நடத்துவதால், லட்சக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுதும்போது, ஏதோ ஒரு இடத்தில் தேர்வு வினாத்தாள் கசிவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஒன்றிய அரசு தனது பிடிவாதமான போக்கைக் கைவிட்டு, அந்தந்த மாநில அரசுகளுக்கே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தவோ அல்லது மாணவர் சேர்க்கையை நிர்வகிக்கவோ பொறுப்பை வழங்கினால் இந்தச் சிக்கல் ஏற்படாது.
ஒன்றிய அரசுக்கு ராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு, நிதிநிலை போன்ற பல பொறுப்புகள் உள்ளன. கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களை மாநில அரசுகளிடம் ஒப்படைத்துவிட்டால், இதுபோன்ற பிரச்சனைகள் எழாது என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
