காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து, தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால், காவிரி நீரை நம்பி வாழும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் முதல்வர் விஜய், காவிரி நதிநீர் வல்லுனர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்கறிஞர் ஜி.உமாபதி மற்றும் காவிரி தொழில்நுட்ப குழுமத்தின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்தனர். டெல்லிக்குச் சென்ற முதல்வர், மேகதாது விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் ஜி.உமாபதியுடன் ஆலோசனை நடத்தி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர இறுதி ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், மேகதாது அணை திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என்றும், இதனால் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் விதிகளை மீறும் இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.