அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் குறித்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், சி.வி.சண்முகம் தரப்பினர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில், முனுசாமி தனது அறிக்கையில், "கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மனவேதனை அளிக்கும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இந்த இயக்கத்தில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி வெற்றி பெற்ற சிலர், தற்போது ஆளுங்கட்சியின் ஆசை வார்த்தைகளை நம்பி, அவர்களின் பொம்மலாட்டத்திற்கு இரையாகி, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள், தங்கள் கையெழுத்தையே மறுக்கும் அளவிற்கு பதவி ஆசை முற்றிவிட்டதா? திமுக ஆதரவுடன் அமையும் ஆட்சிக்கு இவர்கள் கையெழுத்து இட்டார்களா? திருமாவளவனை முதலமைச்சராக்கி, தாங்கள் அமைச்சர்கள் ஆகலாம் என திமுக ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார்களே, அது இப்போது திமுக ஆதரவு, கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு எப்படி மாறியது? அமைச்சராக வேண்டும் என்ற பதவி வெறியில் திமுக பக்கம் பேசியது இவர்கள்தானா என்ற சந்தேகம் தொண்டர்களுக்கு வருகிறது" என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"கூட்டணிக் கட்சி என்றெல்லாம் யோசிக்காமல், அமைச்சர் பதவி மோகத்தில், பாரதிய ஜனதா கட்சி, த.வா.க. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை எனத் தெளிவாகக் கூறிய பிறகும், அவர்கள் மீதும் சேற்றை வாரி இறைக்கிறார்கள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தயவோடு, கொல்லைப்புறத்தில் ஆட்டுவிக்கப்படும் ஆட்சிக்கு ஏன் மண்டியிடுகிறார்கள்? கட்சி எப்படிப் போனால் என்ன, தொண்டன் எக்கேடாய் போனால் என்ன, தாங்கள் அமைச்சர் பதவி வாங்கி அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவர்களது செயல்பாடு உள்ளது" என முனுசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
"வெற்றி எல்லோருக்குமானது, தோல்வி எனக்கானது" என்பது எடப்பாடி பழனிசாமியின் கொள்கை. தேர்தல் பின்னடைவின் சோகம் காயும் முன்பே, இயக்கத்தைப் பிரித்து ஆளுங்கட்சியின் கைப்பாவையாகத் துடிக்கும் இவர்களிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பதவிக்கு வரத்தான் அரசியல் செய்வதாகக் கூறும் தம்பிகளுக்கு, அறிஞர் அண்ணாவின் வழியில், 'பதவி எனும் தோளில் போடும் துண்டுக்கு ஆசைப்பட்டு, கழகம் எனும் இடுப்புக்கு கீழ் கட்டும் வேட்டியைக் கழற்றிவிடாதீர்கள்' என அறிவுறுத்துகிறேன். நீங்கள் செய்வது மாற்று அரசியலா? மனசாட்சியை அடகுவைத்து செய்யும் அரசியலா? எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தும், எங்கள் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேரம் செய்தும், அமைச்சர் மோகம் காட்டி மாயவலை வீசுகிறீர்கள். பொதுச் செயலாளரை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தும், அதை பொருட்படுத்தாமல், பொதுச் செயலாளரை அவதூறாகப் பேசுகின்ற சட்டமன்ற உறுப்பினர் வீட்டிற்கு முதலமைச்சர் செல்வது எந்த விதத்தில் நியாயம்? நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? உங்கள் செயல்களை பொதுமக்கள் விரைவில் தெரிந்துகொள்வார்கள்" என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

