2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டியை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, 'புஷ்பா' திரைப்பட பாணியில் அவர் ஸ்டைலில் கொண்டாடியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சண்டிகரில் நடைபெற்ற இந்த வாழ்வா சாவா போராட்டத்தில், ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 243 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி, ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சலில் அரோரா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றது. குறிப்பாக, நிதிஷ் ரெட்டி 20 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.
ஆட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் பந்துவீச வந்த ரவீந்திர ஜடேஜா, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நிதிஷ் குமார் ரெட்டியை வீழ்த்தி, ஹைதராபாத் அணியின் பிளே-ஆப் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நிதிஷ் ரெட்டி ஆட்டமிழந்தவுடன், ஜடேஜா அவரைப் பெயர் சொல்லி அழைத்து, அவர் முன்னாலேயே 'புஷ்பா' திரைப்பட பாணியில் தனது தாடையைத் தடவி சைகை காட்டி கொண்டாடினார். நிதிஷ் குமார் ரெட்டி வழக்கமாக சதம் அடித்தால் இது போன்ற சினிமா காட்சிகளை வைத்து கொண்டாடுவார் என்பதும், நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் எடுத்தவுடன் இதே பாணியில் சைகை செய்து கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஜடேஜாவின் இந்த கொண்டாட்டம் அமைந்தது.
ஜடேஜாவின் இந்த சினிமா பாணி கொண்டாட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஹைதராபாத் அணி 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில், ஜடேஜாவின் இந்த விக்கெட் ராஜஸ்தான் அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. இறுதியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.