பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு, தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் என இரண்டு இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரையும் கவர்ந்த சூர்யான்ஷ் ஷெட்ஜிற்கு சஞ்சு சாம்சன் அறிமுகத் தொப்பியை வழங்கினார். ஆல்-ரவுண்டரான பிரின்ஸ் யாதவிற்கு சிவம் தூபே தனது தொப்பியை வழங்கி வாழ்த்தினார். எனினும், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அறிமுகப் போட்டிக்காக இன்னும் காத்திருக்க வேண்டும்.
டாஸ் வென்ற பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், வானிலை காரணமாக முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததாகக் கூறினார். மழை எப்போது பெய்யும் என கணிக்க முடியாத சூழலில், அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். வீரர்களின் அறிவுக்கூர்மையையும் உள்ளுணர்வையும் பயன்படுத்தி விளையாட வேண்டும் என்றும், சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு விளையாட வேண்டும் என்றும் ஸ்ரேயாஸ் அறிவுறுத்தினார். அயர்லாந்து அணி முதல் டி20 போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், சூரியான்ஸ் ஷெட்ஜ் அதிரடி வீரராகவும், பிரின்ஸ் யாதவ் கடும் அழுத்தத்தில் தம்மை ஆளாக்கிக் கொள்ளும் வகையில் விளையாட வேண்டும் என்றும் கூறினார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரதிஷ் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அயர்லாந்து அணி கேப்டன் லார்கன் டக்கர், முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்த்து அதன் பின் விளையாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அயர்லாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் அயர்லாந்து அணி இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. தற்போது 1-0 என முன்னிலையில் உள்ள அயர்லாந்து, இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. முந்தைய போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் உத்திகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. இந்த பலவீனங்களை சரிசெய்து இந்திய அணி இன்று மீண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.