கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலகலி கிராமத்தில், பிரவீன் ஜிகலூர் என்பவருக்கும் பாக்யஸ்ரீ (23) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்பட்டன. குறிப்பாக, மனைவியின் நடத்தையில் பிரவீனுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, பாக்யஸ்ரீ கடந்த இரண்டு மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரவீன் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். 'கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு, நாம் இனிமேல் சமாதானமாக சேர்ந்து வாழலாம்' என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, பாக்யஸ்ரீயை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
ஆனால், அவர் அழைத்து வந்த அன்றைய தினமே மாலையில், இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன், பாக்யஸ்ரீயைக் கட்டையால் தாக்கிவிட்டு, பின்னர் அவரைத் தூக்கில் தொங்கவிட்டார். பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இறுதித் தருணங்களை பிரவீன் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து ரசித்துள்ளார்.
மேலும், தனது மனைவியின் பெற்றோருக்கு வீடியோ கால் செய்து, அவர்களின் மகள் உயிருக்குப் போராடும் கொடூரக் காட்சியைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்தினார். பின்னர் அந்த வீடியோவை பலருக்கும் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மகள் உயிருக்குப் போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக உறவினர்கள் உதவியுடன் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாக்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரச் செயலைச் செய்துவிட்டு தலைமறைவாக முயன்ற கணவன் பிரவீனை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
