நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதே அனைவரின் விருப்பம். ஆனால், அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோமா என்பது கேள்விக்குறியே. தினமும் காலை வாக்கிங் செல்வோர் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த சூழலில், நோயின்றி ஆரோக்கியமாக எடை குறைத்து வாழ உதவும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
பொதுவாக, இஞ்சி செரிமானத்திற்கு மிகவும் உகந்தது என்பது நாம் அறிந்ததே. ஒரு லிட்டர் தண்ணீரில் உலர் இஞ்சியைப் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பிறகு அந்த நீரை அருந்த வேண்டும். இந்த இஞ்சி நீர், நம் உடலின் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. மேலும், சளி, இருமல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளையும் இது குறைக்கிறது.
அடுத்து, தினமும் காலையில் எழுந்து வாக்கிங் செல்வது பல நோய்களைத் தீர்க்கும். காலை, மாலை வாக்கிங் செல்வது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவும். இது உடல் கொழுப்பைக் குறைப்பதோடு, இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கிறது.
மேலும், நோயின்றி வாழ ஒரு நாளில் 8 முதல் 10 மணி நேரம் வரை உணவு உண்ணலாம். அதனைத் தொடர்ந்து 14 முதல் 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கலாம். இந்த எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஆரோக்கியமான வாழ்வை நிச்சயம் பெறலாம்.
