சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.2 கிலோ மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில், ஜூன் 1 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றப்படாமல் 928.50 ரூபாயாக இருந்தது. ஆனால் வணிக சிலிண்டர் விலை 46 ரூபாய் உயர்ந்து, 3,237 ரூபாயிலிருந்து 3,283 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 928.50 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 957.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல், டெல்லியில் 942 ரூபாயாகவும், மும்பையில் 941.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 968 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது, இதனால் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு ஷாக்காக இந்த விலை உயர்வு அமைந்துள்ளது.

