அதிமுகவில் தொடர்ச்சியான தோல்விகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளே காரணம் என முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் கடிதம் மூலம் குற்றம்சாட்டியுள்ளனர். பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளராகிய நீங்கள் கழகத்தை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், கழகம் பலவீனமடைந்துள்ளது. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடுத்த தவறான முடிவை சுட்டிக்காட்டி, 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிராக திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் கூட்டணி அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வம் ஒத்துக்கொண்ட நிலையிலும் நீங்கள் அதை நிராகரித்ததால், 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அன்றைய தினம் டிடிவி தினகரனுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என நீங்கள் மறுத்தீர்கள்.
2019 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணியில் இருந்த தேமுதிக, புதிய தமிழகம் கட்சி மற்றும் சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல், 2021 சட்டமன்ற தேர்தலில் அவர்களை வெளியேற்றியதன் மூலம், நாம் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவின் டெல்லி தலைமை பலமுறை கூட்டணி அமைக்க முயன்றும், நமது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தும், நீங்கள் தன்னிச்சையாக முன்யோசனையின்றி செயல்பட்டதால், திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பளித்தீர்கள். உங்கள் இந்த தவறான முடிவால் பல அதிமுக வேட்பாளர்கள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
பாமக கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்தபோதும், ஒரு மாதம் காலதாமதம் செய்ததால் அந்த கூட்டணி வாய்ப்பையும் இழந்தோம். இப்படி தேடிவந்த பாஜக, பாமக போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை நீங்கள் தன்னிச்சையாக நிராகரித்தீர்கள்.
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக அறிவித்துவிட்டு, தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளை நம்முடன் இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றினீர்கள். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால், 2021, 2026 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், நீங்கள் எடுத்த தவறான, தன்னிச்சையான முடிவுகளால் தொடர் தோல்விகளை சந்தித்து, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கழகத்தில் சிறப்பாகப் பணியாற்றி வந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்கள், நீங்கள் சுயநலத்தோடு திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை பொறுத்துக் கொள்ள முடியாமலும், உங்களை தமிழக முதல்வராகவும், கழக பொதுச்செயலாளராகவும் அமர வைத்த முன்னோடிகளை வெளியேற்றியும், புறக்கணித்தும், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் கலந்து ஆலோசிக்காமலும் தன்னிச்சையாக செயல்பட்டதால், கழகத்தினர் கடும் வேதனையோடும், துயரத்தோடும் மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வரும் சூழலிலும், சிறப்பாக கழகப் பணிகளை ஆற்றி வந்த கோவை, திருப்பூர், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், தென்காசி, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி சார்பு அணி செயலாளர்கள், எந்தவித காரணமுமின்றி கழக பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது கழகத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை.
கழக பொதுச்செயலாளராகிய நீங்கள், கழக செயற்குழு, பொதுக்குழுவில் உங்கள் கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், கழகம் எந்த நிலைக்குத் தாழ்ந்தாலும் நான் சொல்வதைத்தான் அனைவரும் ஏற்க வேண்டும் என்ற மனப்பான்மையில், இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை கழக சட்டத்திட்டங்களுக்கு முரணாக கழகத்திலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளீர்கள். தங்களால் நீக்கப்பட்டவர்கள் கழகம் தொடங்கப்பட்ட 1972 முதல் பணியாற்றியவர்கள், அம்மா அவர்களின் விசுவாசிகள், காலம் காலமாக கழக வளர்ச்சிக்காக உழைத்தவர்கள், போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள், பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் உழைத்தவர்கள், குறிப்பாக 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத்தந்தவர்கள் ஆவார்கள்.
மேலும், அவர்கள் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின் மீது மாறாத பற்றும் விசுவாசமும் கொண்டவர்கள். கழகம் சோதனை காலத்தை எதிர் கொண்டபோதெல்லாம் உங்களுடன் பயணித்தவர்கள். கழக வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்கள் என்பதை மறந்துவிட்டு, கழகத்தை பலவீனப்படுத்தும் வகையில் பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்கும் நடவடிக்கைகளை நீங்கள் தொடரக்கூடாது. கழகத்தின் நலன் கருதி, இதுவரை பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.
உங்களை தமிழக முதல்வராக்கிய திருமதி. சசிகலா அவர்களும், டிடிவி தினகரன் அவர்களும், அதேபோல் கழகத்திலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் சேர்ந்தாலும் கூட, அவர்களிடம் பேசி கழகத்தில் சேர்த்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ள நிலையில், இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
