உலகெங்கும் வாழும் தமிழர்களே, வணக்கம்! 17 ஆண்டுகளுக்கு முன்பு, ஈழத்தில் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், வல்லாதிக்க நாடுகளின் துணையோடு நடத்திய மாபெரும் இனப்படுகொலையில் 2 லட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அந்தப் பேரழிவிலிருந்து மீண்டு, இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இலங்கை அரசு மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை நடத்தவும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் உலகத் தமிழர்கள் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றி, இன மீட்சிக்காகவும், தாயக விடுதலைக்காகவும் மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமை.
2009 மே 18 அன்று, முள்ளிவாய்க்கால் மண்ணில் இரண்டு லட்சம் தமிழர்களின் பிணக்குவியல்களுக்கு நடுவே, எல்லாம் முடிந்துவிட்டதாக இன எதிரிகள் எண்ணிய நேரத்தில், 'வீழ்வோம் என்று நினைத்தீரோ?' என்று கேள்வி எழுப்பி, 'விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்!' எனும் இன மீட்சி முழக்கத்துடன் தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக் கனவை நனவாக்க வேண்டிய காலம் இது. தமிழ்நாட்டு மக்களிடையே வளர்ந்து வரும் தமிழின உணர்வை அழிக்க நடக்கும் சதித்திட்டங்களை முறியடித்து, நமது ஒற்றுமையையும் பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது அவசியம்.
இந்த வரலாற்றுத் தருணத்தில், தமிழர்கள் லட்சிய வேங்கைகளாக எழுந்து, இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட உறுதியேற்போம். இன்று, மே 18, 2026 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் பங்கேற்க அறைகூவல் விடுக்கிறேன்! அன்றைய தினம், ஈழத்தில் வறுமையால் அல்லலுற்ற நம் உறவுகள் உப்பில்லா கஞ்சியைக் குடித்துப் போராடியதை நினைவுகூர்ந்து, நாமும் உப்பில்லா கஞ்சியை உண்டு, இன விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்களின் துயரத்தை உலகுக்கு உணர்த்துவோம். இனத்தின் விடுதலை ஒன்றே நமது இலக்கு!

