சென்னை: அதிமுகவின் தற்போதைய நிலைக்கு எடப்பாடி பழனிசாமியின் தவறான செயல்பாடுகளே காரணம் என்றும், அவர் கட்சியை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு ஒதுங்க வேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், அதிமுகவின் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமிதான் முழு காரணம் என்று குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த மாபெரும் கட்சியை, சேலத்தில் ஒரு மூட்டைக்குள் கட்டி வைத்துவிட்டு, ஒரு மாவட்டச் செயலாளர் போல அவர் செயல்படுவதாக அவர் விமர்சித்தார். தனது சுயநலத்திற்காக கட்சியை பயன்படுத்தியதாலேயே அதிமுக அழிவை நோக்கி சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் ஜானகி தனது கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தது போல, எடப்பாடி பழனிசாமியும் தனது தவறுகளை உணர்ந்து, கட்சியை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு ஒதுங்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், அவர் இதை உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நாகர்கோவிலில் சிறை வார்டன்களின் தாக்குதலால் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். தவறு செய்தது அமைச்சராக இருந்தாலும் கூட, இந்த அரசு அவர்களை காப்பாற்றாது என்றும், இதுபோன்ற அத்துமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு இதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் அரசு பார்த்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

