சென்னை: அதிமுகவில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த விவகாரம் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இதுகுறித்து காட்டமாக பதிலளித்துள்ளார்.
நேற்று மாலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகத்திடம், உங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஏன் ராஜினாமா செய்தார்கள், ஏன் அணி மாறினார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'இது குறித்து பிறகு விரிவாக பதிலளிக்கிறேன்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, உங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 17 ஆக குறைந்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, '25 எண்ணிக்கை 35 ஆகக்கூட மாறலாம். அதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?' என்று பதிலளித்தார். மேலும், நீங்கள் த.வெ.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, 'தேவையில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம்' என்று காட்டமாக பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி பூசல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் குறித்து சி.வி.சண்முகத்தின் இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.