தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகராக இருக்கும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், ரோமானியப் பேரரசர் கலிகுலா மற்றும் அவரது குதிரையான இன்சிடாடஸ் பற்றிய ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் இவ்வாறாக மறைமுக விமர்சனம் செய்த நிலையில், அதே கட்சியின் மற்றொரு எம்.பி.யான சசிகாந்த் செந்திலும் இந்த நியமனத்தை விமர்சித்துள்ளார். பண்டிட்டின் நியமனம் குறித்து தனது பதிவில், 'எனக்கும் புரியவில்லை. ஒரு ஜோதிடருக்கு ஏன் OSD (சிறப்புப் பணி அதிகாரி) பதவி தேவைப்படுகிறது? யாராவது விளக்க முடியுமா?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 'பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசில், தனது ஜோதிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் நியமித்திருப்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்ப்பது நல்லது' என்றும் சசிகாந்த் செந்தில் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ரோமானியப் பேரரசின் மூன்றாவது பேரரசர் கலிகுலா, தன்னை ஒரு கடவுளாக வணங்க வேண்டும் என்று செனட்டர்களைக் கட்டாயப்படுத்தியவர். அத்தகைய அரசர், தான் மிகவும் விரும்பிய குதிரையான இன்சிடாடஸை தனது தூதராகவும் நியமிக்க முயன்றார்.
இந்த இன்சிடாடஸ், பளிங்குக் கற்களால் ஆன தொழுவத்தில் வசித்ததாகவும், அதற்குப் பணிவிடை செய்ய 18 வேலைக்காரர்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அது விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கழுத்துப் பட்டைகளையும், அரச குடும்பத்தினர் அணியும் ஊதா நிற ஆடைகளையும் அணிந்திருந்ததாம்.