தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனை நடைபெறுகிறது. கடந்த நிதியாண்டில், மதுபான விற்பனை மூலம் அரசுக்கு 48 ஆயிரத்து 344 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் துறையாக டாஸ்மாக் இருந்தாலும், மதுப்பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், தமிழகத்தில் போதைப் பொருள் பரவலைத் தடுக்கவும், இளைஞர்களைப் பாதுகாக்கவும் 65 சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என்று விஜய் ஆணை பிறப்பித்திருந்தார்.

இந்தச் சூழலில், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள 186 கடைகள், மற்றும் பேருந்து-ரயில் நிலையங்களுக்கு 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 717 கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் இந்தக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள், மற்ற கடைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் பார்களில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version