சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண்கள் குறைந்ததாக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. குறிப்பாக, ஜெஇஇ மெயின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட, 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்துள்ளன.
இந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 'ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்' (OSM) எனப்படும் கணினி வழி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை, விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை கணினி மூலம் மதிப்பீடு செய்வதாகும். இதன் மூலம் தேர்வில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பிழைகளைக் குறைக்கவும் முடியும் என சிபிஎஸ்இ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய முறை மாணவர்களின் மதிப்பெண்களை பாதித்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்' முறையின் நோக்கம், விடைத்தாள் திருத்தும் பணியில் துல்லியத்தன்மையை உறுதி செய்வதும், கூட்டல் மற்றும் அட்டவணைப்படுத்தல் பிழைகளைக் குறைப்பதுமாகும். மேலும், இந்த முறை மதிப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துவதாகவும், கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதாகவும், நிர்வாகச் சுமையைக் குறைப்பதாகவும் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2014-ல் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு சிக்கல்களால் கைவிடப்பட்டது. தற்போது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ வழங்கியுள்ள விளக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. 2025-ல் 88.39% ஆக இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 85.20% ஆக சரிந்துள்ளது. இது மாணவர்களிடையே மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து கொள்ள விரும்பினால், குறைந்த கட்டணத்தில் அதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. விடைத்தாள் நகல் பெற ரூ.700-க்கு பதிலாக ரூ.100 மட்டுமே செலுத்தினால் போதுமானது.