பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சந்திப்பு அருகே நேற்று அதிகாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காரில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 3 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில், கார் அந்த சந்திப்பை நெருங்கியபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறத் தொடங்கியது. இதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை சாலையோரமாக நிறுத்தினார். காரில் இருந்த மூவரும் உடனடியாக காரை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே, காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ மளமளவென பரவி, கார் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. காரின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும், தீயினால் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இந்த தீ விபத்து காரணமாக அகர்-சர்ஜாபுரா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து அறிந்த கோரமங்களா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் எலும்புக் கூடாக நின்ற காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து கோரமங்களா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் ஓடும் காரில் தீ விபத்து: 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
