கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது அவரது கை விரலில் மோதிரம் மாட்டிக்கொண்டது. இதனால் தாங்க முடியாத வலி ஏற்பட்டதால், இந்த வலியுடன் எப்படி திருமணம் செய்வது என்று மணப்பெண் கவலைப்பட்டார்.
இதை அறிந்த மணமக்களின் குடும்பத்தினர், திருமண நாளன்று மணமகள் மற்றும் மணமகன் இருவரையும் மஞ்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மணப்பெண்ணின் விரலில் மோதிரம் மாட்டிக்கொண்டு அவர் வலியால் துடிப்பது குறித்து தீயணைப்பு வீரர்களிடம் தெரிவித்தனர். மோதிரத்தை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி என தீயணைப்பு வீரர்கள் ஆலோசனை செய்தனர்.
பின்னர், உலோகப் பொருட்களை வெட்டும் கட்டர் கருவியைப் பயன்படுத்தி மணப்பெண்ணின் விரலில் சிக்கியிருந்த மோதிரத்தை வெட்டி அகற்ற முடிவு செய்தனர். மோதிரத்தை வெட்டும்போது மணப்பெண்ணின் கையில் எந்தக் காயமும் ஏற்படாதவாறு பணி மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கட்டரில் சிறிய பிளேடு பொருத்தப்பட்டு, மோதிரம் தீயணைப்பு வீரர்களால் வெட்டி எடுக்கப்பட்டது. அதன் பிறகுதான் மணப்பெண் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
மிகவும் கவனமாகச் செயல்பட்டு மோதிரத்தை வெட்டி எடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மணமக்கள் இருவருக்கும் தீயணைப்பு வீரர்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். விரலில் மோதிரம் சிக்கி அவதிப்பட்ட அந்த மணப்பெண், கேரள மாநிலம் மலப்புரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. உபைதுல்லாவின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
