இந்திய கிரிக்கெட் அணியின் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், தனது ஆல்-டைம் சிறந்த ஐந்து இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில், முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களை விட, அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு அவர் முதலிடம் அளித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், புவனேஷ்வர் குமார் மீதான தனது தனிப்பட்ட அபிமானம் காரணமாக இந்தத் தேர்வு சற்று ஒருதலைப்பட்சமாக இருக்கலாம் என்பதை அர்ஷ்தீப் சிங் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 'புவி பாய் எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதால் அவர் எனது பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதில் எனது தனிப்பட்ட விருப்பமும் கலந்திருக்கிறது' என்று அவர் கூறினார்.
தனது பந்துவீச்சாளர் தேர்வின் வரிசையை விளக்கிய அர்ஷ்தீப், முதலில் வேகப்பந்து வீச்சாளர்களை வரிசைப்படுத்துவதாகவும், இரண்டாவது இடத்தில் முகமது ஷமியைத் தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். 'ஏனென்றால், எந்தவொரு விக்கெட்டிலும் அவரால் பந்தை சீம் செய்ய முடியும். அவரது பந்துவீச்சு அற்புதம், பந்தின் சீமை மிகச் சரியாகப் பயன்படுத்துவார்' என்று ஷமியின் திறனை அவர் பாராட்டினார்.
தொடர்ந்து மூன்றாவது இடத்தில் குல்தீப் யாதவை அவர் தேர்வு செய்தார். 'குல்தீப் யாதவ் ஒரு அரிய திறமையைக் கொண்ட பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு மூன்றாவது இடம்' என்று அவர் குறிப்பிட்டார். நான்காவது இடத்தில் யுஸ்வேந்திர சஹால் இடம்பெற்றார். 'நாங்கள் பஞ்சாப் அணியில் ஒன்றாக விளையாடுகிறோம். அவரது சாதனைகளும் அருமையானவை, பல விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்' என்று சஹால் குறித்து அர்ஷ்தீப் தெரிவித்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வினை ஐந்தாவது இடத்தில் சேர்ப்பது குறித்து பேசிய அர்ஷ்தீப், 'அஸ்வின் பாயை கடைசியாக வைக்க எனக்கு விருப்பமில்லை, ஆனால் வேறு இடங்கள் காலியாக இல்லை. அதனால் அவர் ஐந்தாவது இடத்திற்கு வருகிறார். அவர் ஒரு சிறந்த வீரர், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எனது முதல் கேப்டனாகவும் அஸ்வின் பாய் இருந்தார். சாரி அஸ்வின் பாய், உங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்கிறேன்' என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.
மேலும், அர்ஷ்தீப் சிங் தனது ஆல்-டைம் சிறந்த இந்திய விளையாடும் லெவனையும் தேர்வு செய்தார். இதில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக அவர் தேர்வு செய்தார். மூன்றாவது இடத்தில் ராகுல் டிராவிட்டும், நான்காவது இடத்தில் விராட் கோலியும் இடம்பெற்றனர். யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்த பேட்டிங் வரிசைகளில் தேர்வு செய்யப்பட்டனர்.
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக 7வது இடத்தில் தோனியை அவர் தேர்வு செய்தார். பந்துவீச்சுத் துறையை பொறுத்தவரை, ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக ஹர்பஜன் சிங்கை அர்ஷ்தீப் தேர்வு செய்தார். இவர்களுடன் ஜாகீர் கான், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தன்னையும் வேகப்பந்து வீச்சாளர்களாக தனது அணியில் அவர் சேர்த்துக் கொண்டார். இந்தத் தேர்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
