திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று முதலில் கூறியது அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தான் என்று அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'நாங்கள் திமுகவுடன் பேசிவிட்டோம்' என்று கூறியவர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணிதான். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக வேட்பாளர்களைத் தேர்வு செய்யவில்லை. மாறாக, மாவட்ட செயலாளர்கள் யார் யாரை வேட்பாளர்களாகப் பரிந்துரைத்தார்களோ, அவர்களைத்தான் எடப்பாடி பழனிசாமி நிறுத்தினார்.
எனவே, அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு மாவட்ட செயலாளர்கள்தான் முழுப் பொறுப்பு. தேர்தல் தோல்விக்கு வேட்பாளர்கள் காரணமல்ல, மாறாக அமைச்சர்களாக இருந்த குறுநில மன்னர்களே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் நத்தம் விஸ்வநாதன், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்தபோதும், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஏன் தோல்வியுற்றார் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி தரப்பு தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவர் குற்றம்சாட்டினார். எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் பரிந்துரைத்தவர்கள்தான் அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
அப்படியென்றால், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் பரிந்துரைத்த வேட்பாளர்கள் தோல்விக்கு யார் காரணம்? வாய் போன போக்கில் எடப்பாடி பழனிசாமி மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியல்ல என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
