பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை அவர்களின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் காலமானார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலதிக்கு தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 19 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், நோய் தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் உயர்தர சிகிச்சைக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வீடியோ மூலம் உருக்கமாக கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயர்தர சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாலதி, இன்று காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், இறுதிச் சடங்குகளுக்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி திருக்கோதையாபுரம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்று இரவு அங்குள்ள அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. நடிகர் முத்துக்காளையின் மனைவி மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.