சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற திமுக இளைஞர் அணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தற்போதைய ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். 'தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்ததே இல்லை!' என்று அவர் அதிரடியாகக் கருத்து தெரிவித்தார்.
வேளச்சேரி பகுதி இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் மற்றும் எலிசபெத் மிஷேல் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின், இது தனது வீட்டுத் திருமணம் என்ற உரிமையுடன் அனைவரும் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், 'இன்னும் இரண்டு நாட்களில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது 76-வது ஆண்டை நிறைவு செய்து, 77-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 77 ஆண்டுகளில் நம் இயக்கம் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது. மக்களோடு தொடர்ந்து நிற்கும் இயக்கம் இது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இன்றைக்கும் ஒரு சிறப்பான எதிர்க்கட்சியாக மக்களுடன் நின்று செயல்படுகிறோம்' என்று தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியைச் சுட்டிக்காட்டி, 'இங்குள்ள டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் தினமும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். நாடு முழுவதும் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது. சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து, பற்றாக்குறை நிலவுகிறது. இதுகுறித்து கேள்வி கேட்டால், முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. பதில் சொல்ல முடியாத காரணத்தால், திமுக மற்றும் அதன் தலைவர் மீது அவதூறுகளைப் பரப்புகின்றனர்' என்று குற்றம் சாட்டினார்.
'தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்படியொரு அநாகரிகமான, டம்மி முதலமைச்சரை நாம் பார்த்ததே கிடையாது. இதுதான் முதல்முறை. ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால், இந்த நான்கு மாதங்களில் அவர்கள் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் என்ன? நாம் கொண்டு வந்த, நம் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது நம்முடைய திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றி, இந்த அரசு செயல்படுத்துகிறது' என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தல் வெற்றி ஒரு தொடக்கமாக அமைய வேண்டும் என்றும், அதற்கு அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 'இந்த இடைத்தேர்தலில், இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு, இந்த டம்மி முதலமைச்சருக்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒரு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக மணமக்களுக்கு அறிவுரை வழங்கிய உதயநிதி ஸ்டாலின், 'ஒருவரை ஒருவர் புரிந்து நல்ல நண்பர்களாக நடந்துக் கொள்ளுங்கள். சுயமரியாதையுடன் விட்டுக்கொடுக்காமல் இணைந்து வாழுங்கள். உங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு அழகான தமிழ்ப்பெயரைச் சூட்டுங்கள்' எனத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

