தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், சமீபத்திய தேர்தலில் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
உடன்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "எவர் எவரோ ஆட்சிக்கு வந்துவிட்டு ஏதேதோ பேச நினைக்கிறார்கள். இன்னும் 4 மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும். ஆதவ் அர்ஜுனாவுக்கு தைரியம் இருந்தால் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூருக்கு வரட்டும். நானும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இருவரும் திருச்செந்தூரில் போட்டி போட்டு பார்க்கலாம். இது எந்த ஊர் தெரியுமா? எந்த வகையிலும் எவரையும் வீழ்த்திவிடுவோம்" என்று ஆவேசமாக பேசினார்.
மேலும், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல் மாற்றி வைத்திருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடுகெட்டவர்கள். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தை எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவுக்கு அடித்து விரட்டுவோம் என்றும் அவர் பேசினார். அடுத்த 4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல் அமைச்சராக வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்க பார்க்கிறார் என்றும், லாட்டரியில் கொள்ளையடிக்கும் பாவி ஆதவ் அர்ஜுனா என்றும் கடுமையாக விமர்சித்தார். கள்ள லாட்டரி சீட்டு விற்பவரும், கஞ்சா விற்பவரும் தவெக எம்.எல்.ஏ.வாக மாறியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்போம் என கூறும் முதல்வர் விஜய், தனது மனைவிக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும் என்றும், அவரது மனைவி, மகள் அவரது பதவியேற்பு விழாவிற்கு வரவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். இப்படிப்பட்டவர் முதல்-அமைச்சராக வந்தால் தமிழகம் அழிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்றும் அவர் கூறினார்.