சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக அலெக்ஸ் பணியாற்றி வருகிறார். அவர் விடுப்பில் சென்ற நிலையில், குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன்தாஸ் கூடுதல் பொறுப்பாக சட்டம்-ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தார். இந்நிலையில், திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவும், அதற்கு பின்னரும் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஏற்கனவே காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தனது பொறுப்பில் இருந்த பகுதியில் கள்ளச்சந்தை மது விற்பனையை தடுக்க தவறியதாக ஆய்வாளர் மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். மேலும், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறும் காவல் துறையினர் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.