இந்தியாவில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கை அடைய, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்துடன் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், நோயைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு போன்ற பணிகளில் புதிய பரிமாணங்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிப்பதுடன், தொடர் கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோயாளிகளின் வீட்டிற்கே சென்று சளி மாதிரிகள் சேகரிப்பது, தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே கருவிகள் மூலம் அவர்களின் இருப்பிடத்திலேயே எக்ஸ்ரே எடுப்பது போன்ற நவீன அணுகுமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) – தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து செயல்படும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் நா. ஜெ. முத்துக்குமார் மற்றும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் சத்யநாராயணா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், பாரம்பரிய சித்த மருத்துவத்தின் வலிமையைப் பயன்படுத்தி காசநோய்க்கான மருத்துவ பரிசோதனைகள், புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு மற்றும் ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற துறைகளில் இரு நிறுவனங்களின் நிபுணர்களும் இணைந்து பணியாற்றுவார்கள். இதன் மூலம் காசநோய் ஒழிப்பில் ஒரு புதிய மைல்கல்லை எட்டுவதற்கு வழிவகுக்கும்.