கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் கொளுத்தும் இந்த நேரத்தில், புதுச்சேரி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது இடி மின்னலுடன் பெய்த கனமழை. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இந்தப் பரவலான மழை பெய்துள்ளது.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே புதுவையில் வெயில் சுட்டெரிக்கும். மே மாத தொடக்கத்திலேயே 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டனர். அக்னி நட்சத்திரம் மே 4 அன்று தொடங்கியதிலிருந்தே வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அன்றே மழை பெய்யத் தொடங்கியது. அதன் பிறகு இரவிலும், சில சமயங்களில் அதிகாலைப் பொழுதிலும் மழை நீடித்தது. ஆனாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறையவில்லை.
நேற்று நள்ளிரவு முதல் தொடங்கிய மழை, இன்று காலை வரை விட்டுவிட்டு பெய்தது. வானம் இருண்டு, குளிர்ந்த காற்றுடன் கூடிய இடியும் மின்னலும் சேர்ந்து கனமழை கொட்டியது. இதனால் வெப்பத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்தது.
இது குறித்து காரைக்காலைச் சேர்ந்த வானிலை ஆர்வலர் பிரபு பிரபாகர் கூறுகையில், 'புதுச்சேரிக்கு கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியே இந்தப் மழைக்கு முக்கியக் காரணம். தற்போது இந்தத் தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது புயலாக வலுப்பெற வாய்ப்புகள் மிகவும் குறைவு. வங்கக் கடலிலேயே இதன் தீவிரம் குறைந்துவிடும்' என்று தெரிவித்தார்.