அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. அக்ரான் நகரில், ஒரு குடியிருப்புப் பகுதியின் மீது சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், அக்ரான் ஃபல்டன் விமான நிலையத்திலிருந்து பைப்பர் பிஏ-28 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து கேன்டர்பரி சர்க்கிள் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது பயங்கரமாக மோதி விழுந்தது. இந்த மோதலின் தாக்கத்தால் விமானமும், அது விழுந்த வீடும் தீப்பற்றி எரிந்தன.
ஆனால், பெரும் அதிர்ஷ்டவசமாக, விமானம் விழுந்த வீட்டில் இருந்த தம்பதியினரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். எனினும், விமானத்தில் இருந்த இருவர் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயரச் சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை இணைந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.