சென்னை: ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! ‘இந்து தமிழ் திசை’ மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற சிறப்பு வழிகாட்டு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளது. வரும் மே 24-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தி.நகரில் உள்ள வாணி மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பல மாணவர்கள் ஐஏஎஸ் படிப்பில் ஆர்வம் காட்டினாலும், என்ன கல்வித் தகுதி வேண்டும், எவ்வளவு காலம் ஆகும், செலவு அதிகமாகுமா போன்ற சந்தேகங்களால் தயங்கி நிற்கின்றனர். அவர்களின் தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்கு எப்படித் தயாராவது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் திரு. இறையன்பு ஐஏஎஸ் அவர்களும், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் திரு. வெ. திருப்புகழ் ஐஏஎஸ் அவர்களும் பங்கேற்க உள்ளனர். இவர்களது அனுபவங்களும் ஆலோசனைகளும் மாணவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். மேலும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உதவிப் பொதுமேலாளர் மு. முருகேசன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோரும் ஊக்கவுரையாற்ற உள்ளனர்.
காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும். பங்கேற்கும் அனைவருக்கும் தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டக் கையேடு இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில், தேர்வு செய்யப்படும் 3 மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.