அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) ஒரே சட்டமன்ற உறுப்பினரான காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்த நிலையில், 'தங்களை தூய சக்தி என்று கூறிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல, சகிக்க முடியாத துர்நாற்றம்' என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்சியின் நிலைப்பாட்டை மீறி, இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாக தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்திற்காகவே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கப்பட்டார். சட்டமன்றத்தில் யாரையோ புகழ்ந்து பாடியதற்காக அவர் நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த காமராஜை தொடர்பு கொள்ள முடியாத சூழலில், தவெகவிற்கு ஆதரவாக காமராஜ் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் விஜய் தமிழக ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்ததாக தகவல் வெளியானது. அதன் பிறகு, ஆளுநருடனான சந்திப்பின் போது, தவெகவினர் கொடுத்த கடிதம் போலியானது என கடிதம் மூலம் காமராஜ் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார். இருப்பினும், எனது செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேரம் குறித்த சந்தேகம், இன்றைய சட்டமன்ற நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேரம் அரசியலுக்குள் இழுப்பது, மக்கள் தீர்ப்பையும் ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விலைக்கு வாங்க முடியும் என்ற எண்ணத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலில் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல, யாராலும் சகிக்க முடியாத துர்நாற்றம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
