தூத்துக்குடி, சக்தி விநாயகர்புரம் 4வது தெருவைச் சேர்ந்த பூலப்பனின் மகன் அந்தோணி சேசுராஜ் (27) என்பவர், தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த காசிராஜனின் மகளை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. அந்தோணி சேசுராஜ் மதுபோதையில் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவரது மனைவி, ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
சகோதரியை தொடர்ந்து துன்புறுத்தி வந்த அந்தோணி சேசுராஜ் மீது ஆத்திரமடைந்த அவரது மைத்துனர் அருண்குமார் (27), தனது நண்பர்களான சுதாகர், செல்வகுமார் மற்றும் மற்றொருவருடன் சேர்ந்து அந்தோணி சேசுராஜைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
நேற்று இரவு, தூத்துக்குடி ஸ்டெம்பார்க் பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அந்தோணி சேசுராஜை 'மது அருந்த வருமாறு' அவர்கள் ஏமாற்றி அழைத்துள்ளனர். அங்கு அனைவரும் மது அருந்தியபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தோணி சேசுராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்தக் கொலை தொடர்பாக அருண்குமார் மற்றும் அவரது நண்பரான ஆனந்தராஜின் மகன் சுதாகர் (29) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
