த.வெ.க. தலைவரான ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைக் கொண்டாடும் விதமாக, அக்கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை செலுத்தி, தனது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.
நேர்த்திக்கடனைச் செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் மகேந்திரன், 'தளபதி விஜய் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டிருந்தேன். அதன்படி, தலைவர் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்துள்ளதால், அந்த வேண்டுதலை இன்று நிறைவேற்றியுள்ளேன்' என்று தெரிவித்தார்.
'இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் பண பலத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த நிலையை மக்கள் மாற்றிவிட்டனர். ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தளபதி விஜய் கொண்டுவருவார் என நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றி 'பணநாயகத்தை' வீழ்த்தி, 'ஜனநாயகத்தை' நிலைநாட்டியுள்ளது' என்றார்.
'சாதாரண எளிய மக்களும் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுள்ளது தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சியாக அமையும். தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக்கிய முருகப்பெருமானுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வின்போது மாணவரணி இணை அமைப்பாளர்களான பாலமுருகன், சுடலை, ராம்குமார், செல்வகணபதி, சதீஷ், மாரிச்செல்வம், செல்வராஜ் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
