தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்து, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய அ.தி.மு.க., 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், அக்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அத்துடன், எஸ்.பி.வேலுமணியைச் சட்டசபைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவரே அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவர் என்றும் உறுதியாக இருக்கிறார். அவருக்குச் சில மாவட்டச் செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இதை ஏற்க மறுத்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை முதலமைச்சர் விஜயைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி உட்பட 24 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து, தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
