நம் உடல் நலத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று. சிலர் தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிப்பார்கள், இன்னும் சிலர் தாகம் எடுக்காமலேயே தண்ணீர் அருந்துவார்கள். இப்படி, திடீரென்று அதிகளவு தண்ணீர் குடிக்கும்போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
வெப்பமான காலக்கட்டங்களில், நம் உடலில் நீர்ச்சத்து குறைவதால் இயல்பாகவே தாகம் அதிகமாக எடுக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சிலர் தண்ணீரை வழக்கத்தை விட அதிகமாக குடிக்கத் தூண்டப்படுவார்கள். ஆனால், இப்படி தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் சில தீமைகளும் ஏற்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம்முடைய ஒவ்வொருவரது உடல் எடையில் சுமார் 50% முதல் 70% வரை தண்ணீர் உள்ளது. அதிகப்படியாக உழைப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு தண்ணீர் குடிப்பதுண்டு. இப்படி, திடீரென்று அதிகளவு தண்ணீர் குடிக்கும்போது, நம்முடைய சிறுநீரகங்களால் அந்த அதிகப்படியான தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும்.
இதனால், உடல் ரீதியாக பல தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இது சிறுநீரக பாதிப்புக்கு கூட வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக, சிலருக்கு இது உயிரிழப்புக்குக் கூட காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, தண்ணீர் அருந்தும்போது அளவோடு அருந்துவது மிகவும் முக்கியம்.
