முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக கைது செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'குதிரை பேரத்திற்கு எடுத்துக்காட்டே தவெக தான். 108 என்பதை 120 ஆக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. அதற்காக குதிரைபேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊழல் கரை உள்ளவர்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய்' என விமர்சித்தார்.
'குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் 2017 லேயே நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியும். ஆனால் எங்கள் தலைவர் அதை விரும்பவில்லை. மக்களை சந்தித்து தான் ஆட்சிக்கு வந்தோம். எனவே குதிரை பேரத்திற்கு எதிரானது தான் திமுக. அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் தவெக விற்கு தாவி வருகின்றனர். குதிரைபேரத்திற்கு எடுத்துக்காட்டே தவெக தான்' என்றும் அவர் கூறினார்.
மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள், நானே அவர்களை வெற்றி பெற வைக்கிறேன் என முதல்வர் விஜய் உறுதியளித்ததாக வைகோவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தவெக தரப்பில் இருந்து குதிரை பேரம், யானை பேரம் என எல்லாம் நடந்துள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் அந்த குதிரை பேரத்தின் மீது தமிழ்நாடு காவல்துறை, லஞ்ச ஒழிப்பு துறை எந்த ஒரு வழக்கும் பதியவில்லை. ஆனால் யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென்று ஒரு புகார் கொடுக்கிறார், அதன் மீது முழு விசாரணை மேற்கொள்ளாமலேயே நடவடிக்கை தொடங்குகிறது. அந்த புகார் அளித்த எம். எல். ஏ வின் பின்புலம் என்ன தெரியுமா? அவர் ஊத்தங்கரை தொகுதியில் சீட் வாங்கவே முறைகேடு செய்ததாக அந்த கட்சியிலேயே குற்றம் சாட்டுகின்றனர். அதுதான் அவரது தகுதி. இப்போது அவர் சொல்கிறாராம், திருநாவுக்கரசு என்பவர் அவரை தொடர்பு கொண்டு, 'உங்களோட தனியா பேசணும் வாங்க' என்று கூறினாராம். இவர் எதற்கு என கேட்டாராம். 'சபாநாயகர் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர போறோம். அதற்கு ஆதரவா வாக்களிக்கணும்' என்று திருநாவுக்கரசு சொன்னாராம். இப்படி ஒரு கதையை புனைந்து புகாராக கொடுத்துள்ளார். அதன் பேரில் திருநாவுக்கரசை கைது செய்து அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றதாக கூறி இன்றைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்தி உள்ளிட்டவர்கள் மீது அவர்கள் ஏவி விட்ட அம்பு பாய்ந்து கொண்டுள்ளது. இப்படி அவசரவசரமாக ஒரு புகாரை பெற்று அவர்களுக்கு விருப்பப்பட்ட வாக்குமூலத்தை பெற்று தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் முதல்வர் விஜய் கரூருக்கு போவதற்கு முன்னால் செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டு செல்ல வேண்டும் என்கின்ற நோக்கமாக இருக்கலாம் என்றுதான் இன்றைக்கு நினைக்கத் தோன்றுகிறது. எனவே குதிரை பேரம் இங்கே நடந்ததற்கு எந்த ஆதாரமும், அடையாளமுமே கிடையாது. காவல்துறை அங்கே வழக்கு பதிவு செய்ததே முதலில் தவறு. அதுவும் ஒரு புகார் அடிப்படையிலே விசாரணை கூட செய்யாமல் அவர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
குதிரைபேரத்தின் மீது தான் தவெக அரசே நிற்கிறது. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக எம். எல். ஏக்கள் நான்கு பேர் ராஜினாமா பண்றாங்க. அடுத்த நிமிஷம் சட்டமன்றத்திலேயே தவெக வில் இணைகிறார்கள். எனவே அவர்கள் நோக்கம் எல்லாம் 108 என்பதை 120 ஆக்க வேண்டும் என்பது தான். அந்த இலக்கோடு அவர்கள் குதிரைபேர அரசியலிலே ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது இன்றைக்கு வெளிப்படையாக தெரியும். எனவே ஒன்றிய அரசு இதற்கு உரிய விசாரணையை நடத்த வேண்டும். முன்பு எல்லாம் 'வாஷிங் பவுடர் நிர்மா'ன்னு ஒரு பாட்டு வரும். அதுல அந்த பவுடர போட்ட உடனே கரை போயிடும்னு சொல்லுவாங்க. அதுபோல ஒரு ஊழல்கரை உள்ளவங்களுக்கு எல்லாம் வாஷிங் பவுடர் விஜய். இப்போது தவெக வில் இணைந்துள்ள விஜயபாஸ்கர் மேல நாலு கேஸ் நிலுவையில இருக்கு, அந்த எம்.ஆர் விஜய பாஸ்கருக்கு மூணு கேஸ் நிலுவையில இருக்கு. வேலுமணி போன்றவர்கள் அடுத்தடுத்து போக இருப்பதா சொல்றாங்க அவங்க மேலயும் கேஸ் நிலுவையில் இருக்கிறது. இதை எல்லாம் வெறும் பவுடர் போட்டு துவைக்க முடியாது. அதனால மெஷினில் போட்டுதான் துவைக்கணும். அந்த மெஷினுக்கு பேரும் விஜய்ன்னு தான் வச்சிருக்காங்க. விஜய் வாஷிங் மெஷினில் வாஷிங் பவுடர் விஜயை போட்டு துவைத்தால், யார் யார் மீதெல்லாம் ஊழல் குற்ற வழக்குகள் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் புனிதர்களாக, தூய சக்திகளாக மாறிவிடுவார்கள். சொல்ல முடியாது, அவங்களுக்கு கோயில் கட்டி கூட கும்பிட்டாலும் கும்பிட்டுருவாங்க. எனவே அப்படிப்பட்ட நிலைமைதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கிறது. நாங்கள் பொறுப்பான எதிர்கட்சியாக இருக்கிறோம். எங்களுடைய தலைவர் குதிரைபேர அரசியலில் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் 2017லேயே செய்திருக்க முடியும். அன்றைக்கு எங்களிடம் 109 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். ஆனால் குதிரை பேரம் கூடாது, நான் கொள்ளைப்புறம் வழியாக வர விரும்பவில்லை. மக்களை சந்தித்துத்தான் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொன்ன தலைவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். எனவே கொள்ளைப்புற அரசியல், குதிரைபேரம் என்பது எல்லாம் எங்களுக்கு பிடிக்காது. குதிரைபேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் அன்றைக்கே வந்திருக்க முடியும். எனவே குதிரை பேரத்துக்கு எதிரானது தான் திராவிட முன்னேற்ற கழகம். ஜனநாயகத்தை தான் நாங்கள் நம்புகிறோமே தவிர பணநாயகத்தை நம்பவில்லை” என்றார்.